வவுனியா நகர சபைக்கான இணையத்தளம் அங்குரார்ப்பண நிகழ்வு

UNDP அமைப்பின் CDLG திட்டத்தின் அனுசரணையுடன் வடிவமைக்கப்பட்ட வடக்கு மாகாணத்தின் 34 உள்ளூராட்சி மன்றங்களுக்கான இணையத்தளங்கள் நேற்றைய தினம் 01.03.2024 ஆம் திகதி காலை 10.00 மணிக்கு பிரதம செயலாளர் அலுவலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் வட மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் 34 உள்ளூராட்சி மன்றங்களுக்குமான இணையத்தளங்கள் வட மாகாண கௌரவ ஆளுநர் திருமதி.பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களினால் உத்தியோக பூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, இவ் இணையத்தளத்தினை சிறப்புற வடிவமைத்த உத்தியோகத்தர்கள் பிரதம செயலாளர் அவர்களால் மெச்சுரை வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இவ் அங்குரார்ப்பண நிகழ்வில் வடக்கு மாகாணத்தின் பிரதம செயலாளர்,உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர்,வட மாகாணத்தின் உள்ளூராட்சி உதவி ஆணையாளர்கள், சபையின் செயலாளர்கள், UNDP நிறுவனத்தின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் வவுனியா நகர சபைக்குரிய www.vavuniya.uc.gov.lk
எனும் இற்றைப்படுத்தப்பட்ட இணையத்தளமானது நேற்றைய தினம் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. எமது சபைக்கான இணையத்தளத்தினை எமது சபையின் உத்தியோகத்தர்களாகிய திரு.த.பிருந்தாபன் மற்றும் செல்வி .ப.தயாழினி ஆகியோர் வடிவமைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. குறித்த இணையத்தளம் ஊடாக, பொது மக்கள் நகர சபையின் சேவைகள் தொடர்பில் முழுமையான தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் என்பதனை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம்.எதிர்வரும் காலங்களில் குறித்த இணையத்தளம் ஊடாக நகர சபைக்குரிய அனைத்து சேவைகளையும் மக்கள் பெற்றுக்கொள்ளக்கூடியவாறாக, இதனை முழுமைப்படுத்தும் நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருகின்றது.அந்த வகையில் இவ் இணையத்தள வடிவமைப்பிற்கு அனுசரனை வழங்கிய CDLG திட்டக்குழுவினருக்கும் இதனை வெற்றிகரமாக வடிவமைத்த எமது சபையின் உத்தியோகத்தர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.

வவுனியா நகர சபையின் ஆளுகைக்குட்பட்ட தாண்டிக்குளம் – வட்டாரம் 1 இற்கான நடமாடும் சேவை – 29.02.2024

2024 ஆம் ஆண்டின் வவுனியா நகர சபையின் ஆளுகைக்குட்பட்ட தாண்டிக்குளம் வட்டாரத்திற்கான நடமாடும் சேவையானது மக்களுக்கு அறியத்தந்தமையின் பிரகாரம், திருநாவற்குளம் பொதுநோக்கு மண்டபத்தில் 29.02.2024 ஆம் திகதி வியாழக்கிழமை முற்பகல் 9.00 மணி தொடக்கம் பிற்பகல் 3.00 மணி வரை வவுனியா நகர சபையினால் வெற்றிகரமாக நடாத்தப்பட்டது.
குறித்த நடமாடும் சேவையில் வவுனியா மாவட்டத்தின் பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர், நகர சபையின் செயலாளர், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் மற்றும் பொது மக்கள் என பலரும் பங்கேற்றிருந்தனர். குறித்த தினத்தில் நகர சபையினால் வீதி திருத்த வேலைகள், வீதி விளக்குகள் திருத்தம், வடிகாலமைப்பு சுத்திகரிப்பு வேலைகள், நீரிணைப்பு சேவைகள், கழிவற்றல் சேவைகள், சேதன பசளை விற்பனை, வியாபார உரிமம் வழங்குதல், முச்சக்கர வண்டி உரிமம் வழங்குதல், வீதி எல்லைக்கோட்டு சான்றிதழ் வழங்குதல், ஆதன பெயர் மாற்று சேவைகள், ஆதன வரியினை செலுத்துதல், விளம்பர அனுமதிகள், கட்டட அனுமதி வழங்குதல், காணி உப பிரிவிடுகை, நகர சபை பொது சுகாதார பரிசோதகர்களின் சுகாதார ஆலோசனைகள், நகர சபைக்கு உரித்தான முறைப்பாடுகளுக்கான தீர்வு வழங்குதல் உள்ளடங்கலாக அனைத்து சேவைகளும் நகர சபையினால் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
குறித்த தினத்தில் வருகை தந்த பொது மக்களின் வேண்டுகோளுக்கிணங்க, நகர சபையினால், நாக தம்பிரான் கோவில் வீதி மற்றும் ஐயனார் கோவில் வீதி திருத்த வேலைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது. மேலும், 30 வீதி விளக்குகளை திருத்தம் செய்வதற்கான கோரிக்கைகள் மக்களால் முன்வைக்கப்பட்டதற்கமைவாக, குறித்த தினத்திலேயே 28 வீதி விளக்குகள் திருத்தம் செய்யப்பட்டதுடன், 2 வீதி விளக்குகளை திருத்தம் செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த நடமாடும் சேவையின் போது 5 கழிவகற்றல் வாகனங்கள் திண்ம கழிவகற்றல் செயற்பாட்டில் ஈடுபடுத்தப்பட்டதுடன், திண்ம கழிவகற்றல் தொடர்பில் 11 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்று கழிவகற்றல் நடவடிக்கைகள் அன்றைய தினத்திலேயே முன்னெடுக்கப்பட்டிருந்தது. மேலும், விவசாய நடவடிக்கைகளுக்காக நகர சபையால் தயாரிக்கப்பட்ட 280 கிலோ சேதன பசளையானது குறைந்த விலைக்கு (ரூ.25.00 ) பொது மக்களுக்கு வழங்கப்பட்டிருந்தது.
மேலும், பொது மக்களிடமிருந்து 24 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருந்ததுடன், 22 முறைப்பாடுகள் அன்றைய தினமே பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர், செயலாளர் மற்றும் உத்தியோகத்தர்கள் ஆகியோர் நேரடி கள விஜயம் மேற்கொண்டு தீர்வு காணப்பட்டதுடன், 02 முறைப்பாடுகள் தற்போது அலுவலக பரிசீலனையிலுள்ளது. அத்துடன் குறித்த நடமாடும் சேவையில் கிடைக்கப்பெற்ற 35 வியாபார உரிமங்களுக்கான விண்ணப்பங்கள் அன்றைய தினமே பரிசீலிக்கப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டிருந்ததுடன், நூலக சேவையினை விரிவாக்கும் நோக்கில் 25 நூலக அங்கத்துவ விண்ணப்பங்கள் பரசீலிக்கப்பட்டு விண்ணப்பதாரர்களுக்கு நூலக அங்கத்துவ அட்டைகளும் வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த நடமாடும் சேவை நிறைவின் போது 110 இற்கும் அதிகமான பொது மக்கள் வருகை தந்து நகர சபையின் சேவைகளை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. மக்களிடமிருந்து கிடைக்கப்பெற்றிருந்த பெரும்பான்மையான கோரிக்கைகள் அன்றைய தினமே பரிசீலிக்கப்பட்டு உரிய தீர்வுகள் வழங்கப்பட்டது.
வவுனியா நகர சபையினால் முன்னெடுக்கப்பட்ட மக்களுக்கான முதலாவது நடமாடும் சேவையினை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கு எம்முடன் கைகோர்த்து நின்ற மக்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். எதிர்வரும் காலங்களிலும் இவ்வாறான நடமாடும் சேவைகள் ஏனைய வட்டாரங்களிலும் நடாத்தப்படவுள்ளது என்பதனை மகிழ்ச்சியுடன் அறியத்தருவதுடன், நகர சபையின் சேவைகளை திறன்பட வழங்குவதற்கு தங்கள் அனைவரினதும் ஒத்துழைப்பினையும், பங்களிப்பினையும் எதிர்பார்த்து நிற்கின்றோம்.

தாண்டிக்குளம் வட்டாரத்திற்கான நடமாடும் சேவை – 29.02.2024

வவுனியா நகர சபையினால் வழங்கப்படும் அனைத்து சேவைகளையும் தங்கள் பிரதேசங்களுக்கே வருகை தந்து வழங்கும் நோக்கில் தாண்டிக்குளம் வட்டார மக்களுக்கான நடமாடும் சேவையானது நகர சபையினால் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. குறித்த நடமாடும் சேவையானது எதிர்வரும் 29.02.2024 ஆம் திகதி வியாழக்கிழமை முற்பகல் 9.00 மணி தொடக்கம் பிற்பகல் 3.00 மணி வரை திருநாவற்குளம் பொதுநோக்கு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
இந்நடமாடும் சேவையில் நகர சபையினால் வழங்கப்படும் அனைத்து சேவைகளும் முன்னெடுக்கப்படவுள்ளதோடு குறிப்பாக இவ்வாண்டிற்கான ஆதன வரி அறவீடுகள் மற்றும் நிலுவை அறவீடுகள், நகர சபைக்கு சொந்தமான வீதி திருத்த வேலைகள், வீதி விளக்குகள் திருத்தம், சேதனப் பசளை விற்பனை ( கிலோ – ரூ.25.00 ), கழிவகற்றும் சேவைகள் மற்றும் மீள் சுழற்சிக்கான கழிவுப்பொருள் கொள்வனவு உள்ளடங்கலாக அனைத்து சேவைகளும் வழங்கப்படவுள்ளது.
மேலும் ஆதன வரியினை செலுத்தாதோர் ஆதன வரியினை முழுமையாக செலுத்தி கழிவுகளை பெற்றுக்கொள்வதுடன், எமது வட்டாரத்தின் அபிவிருத்திக்கு தங்களது முழுமையான பங்களிப்பினை வழங்குவதற்கு அனைவரையும் அன்புடன் அழைத்து நிற்கின்றோம் 🙏🙏🙏 

நூலக வசதிகள் அற்ற பிரதேசங்களில், நூலகங்களை உருவாக்கும் திட்டம்

எமது சந்ததிகள் இடையே வாசிப்பு அருகி வரும் நிலையில் வவுனியா நகரசபை பொது நூலகத்தின் , கிராமிய மட்டத்தில் வாசிப்பினை ஊக்கப்படுத்தும் வகையில் . நூலக வசதிகள் அற்ற பிரதேசங்களில், நூலகங்களை உருவாக்கும் திட்டத்திற்கு அமைய . 19.02.2024. ” கல்மடு கிராம அபிவிருத்தி சங்கத்தில்” நூலகத்தை உருவாக்கும் நோக்கில் அவர்களது விருப்பத்திற்கும் கோரிக்கைக்கு அமைய ஒரு தொகுதி நூல்களை வழங்கிய தருனம்.

வவுனியா நகர சபை பொது நூலகத்தினால் சமூக மட்டங்களில் வாசிப்பினை ஊக்குவிக்கும் பொருட்டு நூல்கள் அன்பளிப்பு

மனிதன் முழுமை பெற வேண்டுமெனில் வாசிப்பு அவசியம். வாசிப்பு மனிதரிடத்தில் ஓர் சிறந்த மனநிலையை உருவாக்குவதுடன், அறிவார்ந்த சமூகமானது உருவாக வாசிப்பு பழக்கமும், நூல்களும் மிகவும் அவசியமாக உள்ளது.
அந்த வகையில், முதற்கட்டமாக இன்றைய தினம் சமூக மட்டங்களில் வாசிப்பு பழக்கத்தினை ஊக்குவிக்கும் பொருட்டு நூலகங்களை உருவாக்கும் நோக்குடன் தூய ஆவியானவரின் ஆலயத்தில் புதிதாக உருவாக்கப்படும் நூலக உருவாக்கத்திற்கு ஓர் உந்து சக்தியாக நகர சபை பொது நூலகத்தினால் ஒரு தொகுதி நூல்கள் (50) அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளதுடன், புகையிரத பயணிகளுக்கான வாசிப்பினை ஊக்குவிக்கும் திட்டத்தின் முன்மாதிரியாக, வவுனியா புகையிரத நிலையத்தில் சிறியளவிலான நூலக உருவாக்கத்திற்காக ஒரு தொகுதி நூல்களும் (50) வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

விசேட டெங்கு ஒழிப்பு செயற்றிட்டம்

வவுனியா நகர சபை பிரிவிலுள்ள நகரப்பகுதியில் விசேட டெங்கு ஒழிப்பு செயற்றிட்டம் ஒன்று நேற்றைய தினம் (03.02.2024) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த டெங்கு ஒழிப்பு செயற்றிட்டத்தை வவுனியா நகர சபை, சுகாதார சேவைகள் திணைக்களம், வர்த்தக சங்கம், பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து முன்னெடுத்துள்ளனர்.
குறித்த செயற்றிட்டத்தில் நகர சபையானது நகரப்பகுதிகளில் இருந்து திண்மக்கழிவுகளை பாரியளவில் அகற்றியிருந்ததுடன், பழைய பேரூந்து நிலையத்தை சூழவுள்ள வடிகான்களும் நகர சபையின் தண்ணீர் பௌசர்களைக் கொண்டு சுத்தப்படுத்தப்பட்டது. மேலும், இவ்வாறான விசேட டெங்கு ஒழிப்பு செயற்றிட்டங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், இனிவரும் காலங்களிலும், நகர சபையின் கீழ் உள்ள ஏனைய பிரதேசங்களிலும் முன்னெடுக்கப்படவுள்ளது

ஔவையார் நினைவுதினம் அனுஸ்டிப்பு

வவுனியா சின்னப் புதுக்குளம், வெளிக்குளம் சந்தியிலுள்ள ஒளவையார் நினைவுத் தூபியில் அவரது நினைவு தினம் இன்று (25.01.2024) அனுஸ்டிக்கப்பட்டது. வவுனியா நகரசபையின் ஏற்பாட்டில் நகரசபை செயலாளர் திரு.இ. தயாபரன் தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது ஔவையாரின் திருவுருவசிலைக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு, மலர் அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், நினைவுப் பேருரையினை இந்து கலாச்சார உத்தியோகத்தர் திரு.சிவகஜன் நிகழ்த்தியிருந்தார்.
இந்நிகழ்வில் முன்னாள் நகரசபை தலைவர் திரு.ஜி.ரி.லிங்கநாதன், முன்னாள் செட்டிகுளம் பிரதேச சபை தவிசாளர், தமிழ் விருட்சம் அமைப்பினர், நகரசபை உத்தியோகத்தர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

முக்கிய அறிவித்தல்

வவுனியா நகரசபை எல்லைக்குட்பட்ட ஆதன வரிக்கான K படிவம் தற்போது நடுக்கட்ட உத்தியோகத்தர்களினால் விநியோகிக்கப்பட்டு வருகின்றது. இதற்கான பணத்தினை 2024 ஜனவரி 31 ஆம் திகதிக்கு முன்பு செலுத்தின் 10% கழிவினை பெற்றுக்கொள்ள முடியும் என்பதோடு இப்படிவம் கிடைக்கப்பெறாதவர்கள் 024-2228790 ஆகிய தொலைபேசி இலக்கத்தோடு தொடர்பு கொண்டு எம்மிடம் இதனை பெற்றுக்கொள்ள முடியும் என்பதனை அறியத்தருகின்றோம்.
செயலாளர்
நகர சபை வவுனியா

தேசிய மர நடுகை மாத நிகழ்வுகள்

  
தேசிய மர நடுகை மாதத்தினை முன்னிட்டும் நிலைபேறான அபிவிருத்தி இலக்காகிய சூழலியல் பாதுகாப்பினை முன்னிட்டும் முன்னெடுக்கப்பட்ட மர நடுகை மாத நிகழ்வுகளின் பதிவுகள்
*********************************************************************
உலகம் அழியப் போகிறது என்று தெரிந்தாலும் உங்கள் கையில் ஒரு மரம் இருந்தால் அதை நட்டிவிடுங்கள் என ஒரு நபிமொழி சொல்கிறது. ஒரு மரம் மனிதர்களுக்கும் ஏனைய உயிரினங்களுக்கும் எத்தனையோ விடயங்களைக் கொடுக்கிறது.சுவாசிக்க காற்று,நிழல்,கனி,விறகு என மரம் தன்னையே அர்ப்பணிக்கிறது. மரம் எப்போதும் கொடுக்கின்றது. அப்படிப்பட்ட ஒரு மரத்தை நடுவதும் தர்மமாக ஆகிறது.நிலையான தர்மம் அது.
நாம் நடும் ஒரு மரம் வளர்ந்து அதிலிருந்து ஒரு பறவையோ பிராணியோ சாப்பிட்டாலும் அதன் நன்மை நட்டவனுக்குக் கிடைக்கிறது. மரங்கள் மற்றும் காடுகளை அழிப்பதால் அவற்றால் கிடைத்து வந்த பயன்கள் மறைந்து எதிர்மாறான விளைவு ஏற்படும் என்பதை மறந்து, சாலைகள் அமைத்தல், சாலை விரிவாக்கம், தொழிற்சாலைகள், கட்டிடங்கள், நீர் மின் உற்பத்தி நிலையங்கள் அமைப்பது, விமான நிலையங்கள், சுரங்கப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக ஏராளமான மரங்கள் வெட்டப்பட்டும், காடுகள் அழிக்கப்பட்டும் வருகின்றன.
இதனால் பருவநிலை மாற்றம், இயற்கைப் பேரழிவு போன்றவை அதிகரித்துள்ளது.மரங்களைப் போன்று காடுகளை வளர்க்க முடியாது. காடுகளானது மரங்கள் மட்டும் அடங்கியவையல்ல. அவை மரங்கள், செடிகள், கொடிகள், புல் பூண்டு உள்ளிட்ட தாவரங்கள், விலங்குகள், நுண்ணுயிரிகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை கொண்டவை. காடுகளின் இயல்பான போக்கினை மனிதனால் கொண்டுவர முடியாது. அதுவே முன்பு போல் மரங்கள் அடர்ந்திருந்தால் அவற்றின் வேர்கள் மண்ணை இறுகப்பற்றி நிலச்சரிவைத் தடுத்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வளவு நன்மை கொடுக்கும் மரங்கள் காடுகளை அழிவில் இருந்து பாதுகாப்பது என் கடப்பாடாகும்.
எனவே ஒவ்வொரு வீட்டிலும் மரக்கன்றுகளை நட்டு, மரம் வளர்க்க முயற்சிக்க வேண்டும். இடவசதி இல்லாதவர்கள் ஒன்றிணைந்து அருகிலுள்ள மைதானங்கள், பூங்காக்களில் வளர்க்க முயற்சிக்கலாம். குடியிருப்பு வளாகங்கள், பள்ளி, கல்லூரி வளாகங்கள் என பல்வேறு இடங்களில் இதற்கான முயற்சிகளை அனைவரும் ஒன்றிணைந்து மேற்கொள்ளலாம். மரம் வளர்க்க முயற்சிப்பவர்களுக்கு உரிய உதவிபுரிய வேண்டும். இப்படிச் செய்வதன் மூலம் இயற்கை வளங்களை நிச்சயமாக பாதுகாக்க முடியும்.
மரம் வளர்ப்போம்…🌱🌱🌱🌎 மனிதம் வளர்ப்போம் 🌱🌱🌱🌎
Translate »